பொள்ளாச்சியில் பரபரப்பு:காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு 'சீல்'-வருவாய்த்துறையினர் நடவடிக்கை
பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சி அலுவலகத்திற்கு சீல்
ேகாவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்காக கடந்த 1949-ம் ஆண்டு காமராஜர் பெயரில் கிரையம் பெறப்பட்டு, ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி, புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்தநிலையில் நேற்று திடீரென காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பொள்ளாச்சி (வடக்கு) மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனா். அதிகாரிகள் காங்கிரஸ் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சி
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அலுவலகம் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென வருவாய் துறையினர் போலீசார் உதவியுடன் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்து சென்ற சம்பவம் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ள இடம் தொடர்பாக ஜனதாதளத்தை சேர்ந்தவர்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டு சாவி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கலெக்டரிடம் புகார்
காங்கிரஸ் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி கூறுகையில்:- பொள்ளாச்சி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் கட்சி அலுவலகத்தின் சாவி பெறப்பட்டு கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது திடீரென வருவாய்த்துறையினர் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து சென்றிருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என்றார்.