கார் வெடித்ததில் இறந்தவர் வீட்டில் வெடிபொருட்கள் பறிமுதல் -டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

கார் வெடித்ததில் இறந்தவர் வீட்டில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Update: 2022-10-24 00:25 GMT

கோவை,

கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்ததில் இறந்தவர் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. அவரது பெயர் ஜமேஷா முபின், என்ஜினீயர். அவர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர். இந்த கோவில் அருகே போலீஸ் ேசாதனை சாவடி உள்ளது. காரில் ஜமேஷா முபின் வந்த போது போலீசாரை கண்டதும், காரை விட்டு இறங்கி செல்ல முயன்று உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர், உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இறந்த நபர் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை.

பின்னணி குறித்து விசாரணை

மேலும் அவரது செல்போனை கைப்பற்றி அவருடன் தொடர்பில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் துப்பு துலக்கப்பட்டு உள்ளது. ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் 9 பேரிடம் கைமாறி 10-வது நபரிடம் வந்து உள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கியாஸ் சிலிண்டர்களை அவருக்கு சப்ளை செய்தது யார் என்பது குறித்தும் தெரியவந்து உள்ளது. கார் வெடித்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள், கோலி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

ஏற்கனவே ஜமேஷா முபின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி உள்ளனர். மேலும் அவர் உளவுத்துறை கண்காணிப்பிலும் இருந்து வந்து உள்ளார். ஜமேஷா முபின் தற்கொலைப்படையாக செயல்பட வாய்ப்பு குறைவு. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

பாதுகாப்பு

கோவையில் மேலும் அசாம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கை துப்பு துலக்க போலீஸ் அதிகாரிகள் 6 பேர் கொண்ட தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்