டெங்கு பரவலை தடுக்க பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகளில் நிலவேம்புக் கசாயம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-10-05 19:54 IST

போடிப்பட்டி, அக்.6-

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகளில் நிலவேம்புக் கசாயம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொசு உற்பத்தி

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது'மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.தூர்வாரப்படாத சாக்கடைகளில் தேங்கும் கழிவு நீர் மூலம் கொசு உற்பத்தியாகி வருகிறது.அத்துடன் பயன்பாடில்லாத டயர், ஆட்டுரல், கொட்டாங்கச்சி மற்றும் குப்பைகளில் வீசப்படும் பாலிதீன் கழிவுகளில் தேங்கும் மழைநீரிலிருந்து டெங்கு பரவலுக்கு காரணமான ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகின்றன.எனவே கொசு உற்பத்தியைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அதே நேரத்தில், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும்.தற்போது காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கியுள்ளன.பல மாணவர்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில், மடத்துக்குளம் பகுதியில் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும் வகையில் நிலவேம்புக் கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.டெங்கு மட்டுமல்லாமல் மலேரியா, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவிதமான நோய்களுக்கும் மருந்தாக நிலவேம்புக் கசாயம் பயன்படுகிறது.ரத்தத்திலுள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் பரவலைத் தடுக்க நிலவேம்புக் கசாயம் கைகொடுக்கும்.நோய் வந்த பின் மருத்துவம் பார்ப்பதை விட, வரும் முன் காப்பது சிறந்ததாகும்.எனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நிலவேம்புக் கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று அவர்கள் கூறினர்.

பாக்ஸ் செய்தி

9 வகை மூலிகை

சிறியாநங்கை எனப்படும் நிலவேம்புடன் வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைக்கிழங்கு, சந்தனத்தூள், சுக்கு, மிளகு ஆகிய 9 வகை மூலிகைகளைக் கொண்டு நிலவேம்புக் கசாயப் பொடி தயாரிக்கப்படுகிறது.இவை ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.


Tags:    

மேலும் செய்திகள்