பெற்றோர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெற்றோர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெற்றோர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள மாட்டுப்பண்ணையில் வேலை செய்தனர். அந்த தம்பதியின் 12 வயது மகள், கேரளாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 2018-ம் ஆண்டு அந்த சிறுமி தனது பெற்றோரை பார்ப்பதற்காக புளியரைக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சிறுமிக்கு புளியரை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 55) பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு அந்த சிறுமியின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
சிறை தண்டனை
இதுகுறித்த புகாரின்பேரில், தென்காசி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி மற்றும் அந்த சிறுமியின் பெற்றோரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி, குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதமும், சிறுமியின் பெற்றோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.
வலைவீச்சு
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சாஜூ என்பவரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கும் சிறுமியின் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து தென்காசி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சாஜூ மற்றும் சிறுமியின் பெற்றோரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த சாஜூ தலைமறைவானார்.
இந்த வழக்கும் நெல்லை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி, குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
சாஜூ தலைமறைவாக உள்ளதால் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.