வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.70 ஆயிரம் மோசடி; வாலிபர் கைது

பாளையங்கோட்டையில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-31 01:29 IST

பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் சீயோன் நகரைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி (வயது 35). வியாபாரியான இவர், அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு அடகு வைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரிடம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவராமமங்களம் பகுதியைச் சேர்ந்த ரிசப் சங்கர் (24) அணுகி, நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சத்துக்கு 70 ஆயிரத்துக்கு தனது நகைகள் அடமானத்தில் உள்ளதாகவும், அதனை மீட்க தன்னிடம் ரூ.2 லட்சம் உள்ளதாகவும், எனவே ரூ.70 ஆயிரம் தருமாறும், நகைகளை மீட்டு பின்னர் அவற்றை கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்து பணத்தை திருப்பி தருவதாகவும் கூறினார்.

இதனை உண்மை என்று நம்பிய கிங்ஸ்லி, ரிசப் சங்கருக்கு ரூ.70 ஆயிரத்தை வழங்கியதுடன், நகைகளை மீட்பதற்காக தனியார் வங்கிக்கு அவரையும் அழைத்து சென்றார். வங்கிக்கு சென்றதும் ரிசப் சங்கர் தனது உறவினர் நகைகளை மீட்டு கொண்டு வந்து தருவதாக கூறி சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கிங்ஸ்லி, இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுப்படி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிசப் சங்கரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்