தவெக தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும்: டிடிவி தினகரன்
தவெக தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி கூறிவிட்டேன். இனியும் அரைத்த மாவையே அரைக்க விரும்பவில்லை. அ.ம.மு.க. எத்தனையோ சோதனைகள், பின்னடைவுகளை தாண்டி தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து உள்ளது. தமிழகத்தில் எங்களை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
கூட்டணிக்கு வரவேண்டும் என தற்போது எங்களை அணுகி வருகிறார்கள். எங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் நான் செய்வேன். பிப்ரவரியில் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பிறகு எங்களது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
த.வெ.க. தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதில் வாலிபர் தற்கொலை செய்தது தவறான முன்னுதாரணம். இந்த ஆண்டு ஏற்றவில்லை என்றால் அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம் என இருந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.