இலவச கண் பரிசோதனை முகாம்

வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் தர்ம ஸ்தாபனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் காட்பாடியில் நடந்தது

Update: 2023-03-19 15:30 GMT

காட்பாடி காந்திநகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் தர்ம ஸ்தாபனம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் 20-ம் ஆண்டு கண் பரிசோதனை முகாம் இன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது.

கே.கோவிந்தராஜூநாயுடு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக லெட்சுமணன் முதலியார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

டாக்டர் திருவேங்கடம் மேற்பார்வையில், மருத்துவர் குழுவினர் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

முகாமில் 810 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வெள்ளெழுத்து, கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கருவிழியில் புண், குழந்தைகளின் கண் நோய் தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இலவச அறுவை சிகிச்சைக்கு 211 பேர் பரிந்துரை செய்யப்பட்டு, பஸ்கள் மூலம் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 150 பேருக்கு இலவச சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இதில் மெடிக்கல் தணிகைமலை, கார்த்திக், ஜெயச்சந்திரன், சுந்தர்ராஜ், கே.இ.ஆர்.பெருமாள், யோகானந்தன், பாபு, பிரதீப், ரகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சக்தி சாய் சேவா சங்கத்தினர் சேவை பணியில் ஈடுபட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். முகாம் நடத்துவதற்கு ஆதிலட்சுமி திருமண மண்டபத்தை பாலமுரளி இலவசமாக வழங்கினார்.

ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ஆர்.ஜி.தர்மராஜ், வி.நரசிம்மன், டி.ராஜேந்திரன், டி.பாலமுரளி, கே.ஆர்.விஜயன், குமரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்