இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை: சின்ன வெங்காயம் விலை இரட்டை சதம் அடித்தது

திருச்சியில் இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் இரட்டை சதம் அடித்து, ஒரு கிலோ ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-12 18:55 GMT

இஞ்சி கிலோ ரூ.300

காய்கறி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. முதலில் தக்காளி விலை உயரத்தொடங்கியது. கடந்த மாதத்தில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ரூ.100 வரை திருச்சி காந்திமார்க்கெட்டில் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட்டில் அதைவிட அதிகமாக விற்கப்படுகிறது.

தக்காளியை தொடர்ந்து இஞ்சி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது இஞ்சி ஒரு கிலோ ரூ.270 முதல் ரூ.300 வரை காந்தி மார்க்கெட்டிலேயே விற்கப்படுகிறது. காய்கறி வகையில் ஹாட்ரிக் சதம் அடித்து இஞ்சி விற்பனை ஆகி வருகிறது. இதேபோல், சில காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது.

இரட்டை சதம் அடித்தது

இது ஒருபுறம் இருக்க பூண்டு விலையும் யாரும் எதிர்பாராத விதமாக எகிறியது. அதுவும் ஒரு கிலோ ரூ.200-ஐ தாண்டி மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் விற்பனை ஆகிறது. இந்த வரிசையில் தற்போது சின்ன வெங்காயமும் இடம்பெற்று விட்டது.

காந்திமார்க்கெட்டில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வந்த சின்னவெங்காயம் நேற்று கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை உயர்ந்து, ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. மளிகை கடைகளில் ரூ.230 வரை விற்பனையானது. இதன் மூலம் இஞ்சியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் இரட்டை சதம் அடித்து இருக்கிறது.

வரத்து குறைவு

சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாகவே அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளது. வரக்கூடிய நாட்களிலும் அதன் விலை சற்று உயர வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கும் மேலும் பேரிடியாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்