திண்டிவனம் அருகே கோர விபத்து ஆட்டோ மீது லாரி மோதல்; 4 பேர் பலி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
திண்டிவனம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.;
திண்டிவனம்,
சென்னை கோடம்பாக்கம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் கைலாசம் மகன் குருமூர்த்தி(வயது 50). ஆட்டோ டிரைவர். இவர், தனது மனைவியின் சகோதரியான காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யன்சேரியை சோ்ந்த மஞ்சுளா, இவருடைய கணவர் குமரகுரு, மகன் விஜயன் ஆகியோருடன் ஒரு ஆட்டோவில் நேற்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அதே ஆட்டோவில் 4 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். ஆட்டோவை குருமூர்த்தி ஓட்டினார்.
பயங்கர மோதல்
மாலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூரில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி ஒன்று, அவர்கள் வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் மோதிய வேகத்தில் லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்தது.
4 பேர் பலி
இந்த விபத்தில் குருமூர்த்தி, குமரகுரு, மஞ்சுளா, விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோஷனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த லாரி டிரைவரான விக்கிரவாண்டி ஆவடியாம்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தட்சணாமூர்த்தி(50) விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.