"கால்நடை வளர்ப்போருக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது"- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
“கால்நடை வளர்ப்போருக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது என ராமானுஜம்புதூர் கிராமத்தில் நடந்த கால்நடை விழிப்புணர்வு முகாமில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.;
ஸ்ரீவைகுண்டம்:
"கால்நடை வளர்ப்போருக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது என ராமானுஜம்புதூர் கிராமத்தில் நடந்த கால்நடை விழிப்புணர்வு முகாமில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் ராமானுஜம்புதூர் கிராமத்தில் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் லெட்சுமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்லப்பாண்டியன், தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கொம்பையா, கால்வாய் இசக்கிபாண்டியன், ராமசாமி, சுரேஷ்காந்தி, ராமானுஜம்புதூர் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து மாடுவளர்ப்பு, கால்நடை தீவனம், கோழி வளர்ப்பு நாட்டின மாடுகள் கண்காட்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு விவசாயிகளிடம் அரசு கால்நடை காப்பீடு குறித்தும், இதனை பயன்படுத்தி கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.
வருடத்துக்கு ஒரு கன்று
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
கால்நடை பராமரிப்பு தொழிலை நம்பி வாழும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் வகையில் 1000 ஏக்கர் மேய்க்கால் நிலங்களை மேம்படுத்துதல், 2000 ஏக்கரில் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவன உற்பத்தி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.3000 மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கால்நடை வளர்ப்போரை தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக பண்ணை முறையில் கோழி வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனப்பயிர் உற்பத்தி ஆகியவற்றில் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 14 தொழில் முனைவோரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு 5 தொழில் முனைவோருக்கு முதல் தவணை மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலக்கை அடைய வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவா் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சங்கர், பொதுச் செயலாளர்கள் காங்கிரஸ் எடிசன், வட்டார தலைவர் புங்கன், ஊடகப்பிரிவு மரியராஜ், ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் மரியதாஸ், முத்துமணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.