வருவாய் அதிகரிக்க அரசு பஸ்களில் விளம்பரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

வருவாய் அதிகரிக்க அரசு பஸ்களில் விளம்பரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு, அரசு கூடுதல் தலைமை செயலாளர் கோபால் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-08 19:50 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் கோபால், சிதம்பரம் 1 மற்றும் சிதம்பரம்-2 ஆகிய பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிமனைகள் மற்றும் அங்கிருந்த பஸ்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் பணிமனைகளில் பராமரிப்பு பணியை மேம்படுத்திட வேண்டும். பணிமனை வளாகத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் பராமரிக்க வேண்டும். பயணிகளுக்கு இடையூறு இன்றி பஸ்களை இயக்கிட வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர், அனைத்து பஸ்களிலும் விளம்பரம் இருப்பதை உறுதி செய்து, அதனால் வருகிற வருவாய் அதிகரிக்க வேண்டும் என்றார்.

பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள்

இதையடுத்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் கோபால், கடலூர் நகரில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகர பஸ்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பஸ்கள் அனைத்தும் தடையின்றி இயக்கும் வகையில் உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து கழக அலுவலர்களிடம் எந்தெந்த தடங்களில் எத்தனை பஸ்கள் இயக்கப்படுகின்றன, அதில் எத்தனை பெண் பயணிகள் பயணிக்கின்றனர் என்ற விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

பின்னர் அரசு பஸ்களில் ஏறி பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், பயணிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பஸ் நிறுத்தங்களில் சரியாக நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லுமாறும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் பயணம் மேற்கொள்ளாமல் இருக்க பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கிடவும் அறிவுறுத்தினார்.

அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் ஜோசப் டயஸ், கடலூர் மண்டல துணை மேலாளர் (வணிகம்) சேகர்ராஜ், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்