கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் பெருந்தலைவர் காமராஜர்

கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் காமராஜர் என பெருந்தலைவர் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. கூறினார்.

Update: 2022-07-13 18:35 GMT
கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் காமராஜர் என பெருந்தலைவர் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. கூறினார்.

பட்டமளிப்பு விழா

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் காமராஜர் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்த மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் படித்த மாணவ, மாணவிகள் 1,33,091 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 1,24,019 மாணவ, மாணவிகள் நேரடியாக பல்கலைக்கழகம், கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களாவர். 8,081 பேர் பருவமுறை அல்லாத தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ளனர். பருவமுறையில் பட்டம் பெற்றவர்களில் 54,569 மாணவர்களும், 69,450 மாணவிகளும் அடங்குவர். பருவமுறை அல்லாத பட்டம் பெற்றவர்களில் 3,960 மாணவர்களும், 4,121 மாணவிகளும் அடங்குவர்.

முன்னதாக துணைவேந்தர் குமார் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். ஐ.ஐ.எஸ்சி., முன்னாள் இயக்குனரும், தேசிய உயிரி அறிவியல் மையத்தின் தலைமை பேராசிரியருமான பலராம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மத்திய இணை மந்திரி முருகன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழில் பேசிய கவர்னர்

இதைதொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் கவர்னர் ரவி பேசும் போது, இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள பெற்றோர்கள், மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக மாறட்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தமிழில் பேசினார்.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ள காமராஜர் எளிமையான பின்புலத்தை கொண்ட சிறந்த தேசியவாதி. அவரது வாழ்க்கை நமக்கு பாடமாகும். அவர், தனது இளமைப்பருவத்தில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டவர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது கருத்துக்களை தைரியமாக பேசியவர். கி.பி.1600-களில் வர்த்தக நோக்கில் நிறுவனமாக வந்த ஆங்கிலேயர்கள் 1750-களில் நமது மாகாணங்களை கைப்பற்றும் அரசியல் அதிகாரிகளாக மாறினர். நமது ஒற்றுமையை பலவீனப்படுத்தி, மக்களை பிரித்தனர்.

காமராஜரின் கல்விச்சீர்திருத்தம்

இந்தியாவின் தொழில்நுட்ப அறிவை தங்கள் வசப்படுத்தி கொள்வதற்காக தனி கல்விக்கொள்கையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அத்தகைய கல்விமுறை தான் தற்போது வரை இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களின் கல்வி முறையை மாற்ற வேண்டும் என்பதற்காக புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் பெருந்தலைவர் காமராஜர். நமது தொழில்நுட்பம், கட்டமைப்பு, உயர்கல்வி என அனைத்துக்கும் அடித்தளம் போட்டவர் அவர்.

ஆங்கிலேயர்கள் 1905-ம் ஆண்டு இந்த நாட்டை சமூக ரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாக, பிளவுபடுத்தினர். இந்தியாவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என பிரித்தனர். பின் வடக்கு ஆரியர்கள், தென்பகுதி திராவிடர்கள் எனக்கூறி, அதையும் பஞ்ச ஆரியர்கள், திராவிடர்கள் என பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை தனித்தனியாக பிரித்து பார்க்காமல் ஒரே குடும்பமாக பார்த்தால்தான் இந்தியா ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

மேலும் செய்திகள்