அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-05-03 11:13 GMT

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,

ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினையும், பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலையும் நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றுவது மக்கள் நல்வாழ்வு என்பதால், இதனை எய்திடும் வகையில் அரசு மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல்; எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்தல்; தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு உரிய ஊதியத்தை அளிப்பதும் அரசின் தலையாய கடமையாகும்.

முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்து 23-10-2009 நாளிட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசாணை எண் 354 நிதித் துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த அரசாணை 2011 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும் வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் பல்லாண்டு காலமாக போராடி வருகிறார்கள்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 2019 ஆம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார். மேலும், போராடுவது அவர்களுடைய உரிமை மற்றும் கடமை என்றும், அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் வெளி வந்தன.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அரசு மருத்துவர்களுடைய கோரிக்கையினை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு மறுத்து வருகிறது. தி.மு.க.வின் முந்தைய ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணையையே அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத தி.மு.க., 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறது?.

இது குறித்து நான் ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தேன். அரசு மருத்துவர்களும் போராட்டங்களின்மூலம் அரசின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்கள். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக போராட்டக்காரர்களின்மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

இதுவும் தி.மு.க.வின் இரட்டை நாக்கிற்கு ஓர் எடுத்துக்காட்டு. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகின்ற திட்டத்தை செயல்படுத்தும் தி.மு.க. அரசு, மக்களின் நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களுக்கான திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போராட்டக் குழு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்