கொள்ளையனால் தாக்கப்பட்ட மூதாட்டி பலி
சூலூர் அருகே கொள்ளையனால் தாக்கப்பட்ட மூதாட்டி பலியானார்.;
கருமத்தம்பட்டி
கோவை சூலூரை அடுத்த அப்பநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் நிர்மலா (வயது 49). இவருடைய தாயார் ராதா (80). இந்த நிலையில் சம்பவத்தன்று ராதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ராதாவை தாக்கி, கட்டிப்போட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றார். இதற்கிடையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிர்மலா தனது தாயார் ரத்த காயத்துடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவரை சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீலகிரி மாவட்டம் தேவலாவை சேர்ந்த காளிதாஸ் (32) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காளிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட கொள்ளை வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.