ஜி.எஸ்.டி. வரியாக ரூ.3 ஆயிரத்து 3 கோடி வசூல்

ஜி.எஸ்.டி. வரியாக ரூ.3 ஆயிரத்து 3 கோடி வசூல்;

Update:2023-07-02 00:15 IST

கோவை

கோவையில் கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரியாக ரூ.3 ஆயிரத்து 3 கோடி வசூலாகி உள்ளது என்று கோவை ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை முதன்மை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் கூறினார்.

ஜி.எஸ்.டி. வரி

கோவை ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் நேற்று ஜி.எஸ்.டி. தினம் கொண்டாப்பட்டது. அப்போது கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி ஆணையரக முதன்மை ஆணையர் ஏ.ஆர்.எஸ். குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடுமுழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை பல்வேறு வகையான பன்முக வரிகள் இருந்தன. இதனால் வரி செலுத்துவதில் சிரமம் இருந்தது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்ட 2017-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக நாட்டின் வரி வருவாய் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.18.10 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதுதவிர வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் 67 லட்சத்தில் இருந்து 1.4 கோடியாக அதிகரித்து உள்ளது.

ரூ.3 ஆயிரத்து 3 கோடி வசூல்

கோவை ஆணையரகத்தில் 2017-ம் ஆண்டில் ரூ.1,106 கோடி ஜி.எஸ்.டி. வருவாயாக இருந்தது. அதுவே கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.3 ஆயிரத்து 3 கோடியாக உயர்ந்து குறிப்பிட்ட இலக்கையும் தாண்டி சாதனை படைத்து உள்ளது. அத்துடன் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் 53 ஆயிரத்து 800-ல் இருந்து 77 ஆயிரத்து 484 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 7 ஆயிரம் வரிசெலுத்துவோராக உயர்த்தப்பட்டு உள்ளனர்.

பதிவு, வரி செலுத்துதல், ரிட்டர்ன் தாக்கல் என அனைத்தும் ஆன்லைன் என்பதால், வெளிப்படைத் தன்மை அதிகரித்து, வர்த்தகம் எளிமையாக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 88 சதவீத நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரியால் பயனடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.

ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக கடந்த நிதியாண்டில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.112 கோடி வரி மோசடி கண்டறியப்பட்டது. இதில் ரூ.47 கோடி வரை உடனடியாக வசூலிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்வதும் கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து நினைவுப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் 97 சதவீதம் பேர் ரிட்டர்ன் தாக்கல் செய்து உள்ளனர்.

186 போலி நிறுவனங்கள்

கோவை ஆணையரகத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.813 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தை காட்டிலும் ரூ.91 கோடி அதிகம் ஆகும்.

கோவை ஆணையரகத்தில் சந்தேகத்துக்குரிய 212 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 186 நிறுவனங்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. 84 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்று உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் அரசு, வரிசெலுத்துவோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து உள்ளனர். நாட்டை ஒருதேசம் ஒருவரியாக மாற்றி நாட்டை பொருளாதார சங்கமமாக பிணைக்கிறது.



Tags:    

மேலும் செய்திகள்