பாகன் தம்பதியை, விமானத்திலேயே பாராட்டி மகிழ்ந்த பயணிகள்

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதியை விமானத்திலேயே பயணிகள் மற்றும் விமானி ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.;

Update:2023-03-26 00:15 IST

கோவை

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதியை விமானத்திலேயே பயணிகள் மற்றும் விமானி ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.

ஆஸ்கர் விருது

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயை பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பாகனுக் கும் இடையே உள்ள உறவை சித்தரிக்கும் "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" என்ற ஆவணப்படத்துக்கு கடந்த 13-ந் தேதி ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தை கார்த்திகி கோன்சல்வாஸ் இயக்கி இருந்தார்.

இதன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆவணப்படம் என்ற சாதனை படைத்தது. ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்ததால், அந்த யானைகளை பராமரித்த நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதி உலக அளவில் புகழ் அடைந்தனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

பாராட்டு விழா

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொம்மன், பெள்ளி ஆகியோரை சென்னைக்கு நேரில் வரவழைத்து பாராட்டு கேடயமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" படக்குழுவினருக்கு மும்பையில் பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் யானை பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் கோவையில் இருந்து மும்பை சென்றனர்.

விமானியின் அறிவிப்பு

அங்கு பாராட்டு விழா முடிந்து பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோர் மும்பையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானத் தில் புறப்பட தயாரானார்கள். அப்போது பாகன் தம்பதி விமானத்தில் வருவது, விமானிக்கு தெரியவந்தது.

உடனே விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானி எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார். அதை கேட்டு விமானத்தில் இருந்த பயணிகள் என்ன சொல்கிறார் என தெரியாமல் குழம்பினர்.

கைதட்டி உற்சாகம்

அதைத்தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்றார்.

அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்துக்கு உள்ளே வந்தனர். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர்.

பாகன் தம்பதியுடன் செல்பி

அதை பார்த்து நெகிழ்ந்து போன பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு கைகூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்தனர். அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என்றார்.

கோவை வரும் வரை பொம்மன், பெள்ளியிடம் விமான பயணிகள் அனைவரும் பேசி மகிழ்ந்தனர். கோவையில் விமானம் தரை இறங்கியதும், விமான பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வரிசையாக நின்றனர்.

அவர்கள், பொம்மன், பெள்ளியுடன் செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அதை சிலர் சமூக வலைதளங்களில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு என்று தலைப்பிட்டு பகிர்ந்தனர். அது வைரலாக பரவியது.

பெருமையான தருணம்

பொம்மன், பெள்ளி ஆகியோர் கோவையில் இருந்து கார் மூலமாக நீலகிரி புறப்பட்டு சென்றனர். இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பொம்மன், பெள்ளி பயணித்த வீடியோவை பகிர்ந்து, அதில் எங்கள் விமானத்தில் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த கலைஞர்கள் பயணித்தது எங்களுக்கு பெருமையான தருணமாகும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து பொம்மன், பெள்ளி கூறியதாவது:-

நாங்கள் மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்புவதற்காக விமானத்தில் பயணித்தோம். அப்போது எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை வெகுவாக பாராட்டினர். இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

யானைகளையே சாரும்

காட்டுக்குள் இருந்த எங்களுக்கு அங்கிருந்து வெளியில் வந்து நகர பகுதியை பார்வை யிட்டதும், அங்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் மிகவும் அளப்பரியது.

எங்களுக்கு கிடைத்த இந்த பெருமை எல்லாம் குட்டி யானைகளான ரகு, பொம்மியையே சாரும். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளோம். எங்களை எங்கு பார்த்தாலும் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டு தெரிவிப்பதோடு எங்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்