ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகதி.மு.க. கவுன்சிலர் மீது வழக்கு

ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-10-13 18:45 GMT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39). இவர், தற்போது பழனிசெட்டிபட்டி லட்சுமிநகரில் வசித்து வருகிறார். அவர், தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'நான் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து, பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகளை சேகரிக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் பெற்று மறுசுழற்சி செய்வதற்கான பணிகளை 3 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.

இந்நிலையில் பழனிசெட்டிபட்டி 3-வது வார்டு கவுன்சிலரான செல்வராஜ் (55) தனக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டார். தர மறுத்ததால் என்னை அடையாளம் தெரியாத நபர்களுடன் வந்து தாக்கி மிரட்டினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் செல்வராஜ் மீது பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்வராஜ் தி.மு.க.வை சேர்ந்தவர் ஆவர். பழனிசெட்டிபட்டி தி.மு.க. பேரூர் செயலாளராகவும் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்