சிங்கம்புணரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிங்கம்புணரி பகுதியில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி மறுத்த நிலையில் சமூக வலைதளங்களில் போட்டி நடைபெறுவதாக பரவிய தகவல்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2023-08-09 18:45 GMT

சிங்கம்புணரி பகுதியில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி மறுத்த நிலையில் சமூக வலைதளங்களில் போட்டி நடைபெறுவதாக பரவிய தகவல்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் காட்டில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக மனு அளித்திருந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு அரசாணையில் இப்பகுதி இடம்பெறவில்லை எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்கவில்லை என்றும் போலீஸ் தரப்பிலும் மஞ்சுவிரட்டு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் சார்பில் ஒலிபெருக்கி மூலமும், விளம்பர பதாகைகள் மூலமும் மஞ்சுவிரட்டு நடைபெறாது என போலீசார் அறிவிப்பு செய்து வந்தனர். சிங்கம்புணரி கிழவன் கண்மாய் பகுதியில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்ப வேண்டாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேலும் இதனை மீதி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சித்தால் மாடுகள் பறிமுதல் செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். ஆங்காங்கே இதுகுறித்த விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்படாமல் தடுக்க சிங்கம்புணரி பகுதியில் பல இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை வரை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிங்கம்புணரியில் பரபரப்பாக காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்