சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி
சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்சார பஸ்களுக்கு வழங்கப்பட்டு வந்த சாலை வரி விலக்கு 31-ந்தேதி (இன்றுடன்) முடிவடைய இருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
எங்களின் கோரிக்கையை பரிசீலித்து, மின்சார பஸ்களுக்கான சாலை வரி விலக்கை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், மராட்டிய மாநில அரசு மின்சார பஸ்களை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள சாலை சுங்கச்சாவடிகளில் மின்சார பஸ்களுக்கு முழுமையான சுங்கக் கட்டண விலக்கு வழங்கி வருவது பாராட்டத்தக்க முன்னுதாரணமாக உள்ளது. அதேபோன்று, தமிழ்நாடு அரசும் மாநிலத்தில் பசுமை போக்குவரத்தை வளர்க்கும் வகையில், மின்சார ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் முழுமையான சுங்கக் கட்டண விலக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.