ஆங்கிலப் புத்தாண்டு: வைகோ வாழ்த்து

தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் உறுதி ஏற்க வேண்டுமென வைகோ தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-31 09:36 IST

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

மனிதகுலம் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ளத் திட்டமிடுவதற்காகவே கால ஓட்டம் கணிக்கப்படுவதால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குதான் விநாடிகள், நிமிடங்கள், மணி, நாள்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக்கி, அதற்கு முன்பும்-பின்பும் இரண்டாகப் பகுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குப் பின் தற்போது இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நாளில் 2026 இல், உலகம் அடி எடுத்து வைக்கின்றது.

‘இருளுக்குப் பின் ஒளி; வாட்டும் பனிக்குப் பின் வளம் தரும் வசந்தம்’ என்ற நியதியில் நம்பிக்கை கொள்வோம். கொல்கதாவில் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்திய இயேசுநாதர், கொடூரமான ரணங்களைச் சிலுவைப்பாடாகச் சுமந்தபோதிலும், அவர் பிறந்த நாளில் இருந்து எட்டாவது நாளையே கால ஓட்டத்தைத் தீர்மானிக்கும் ஆண்டின் முதல் நாளாக உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா, சூடான், கேமரூன், சமோவா, புருனோ, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகள், விடுதலை பெற்ற நாள் ஜனவரி 1 ஆகும். கருப்பர்களின் அடிமைத் தளைகளை நீக்கிட, ஆபிரகாம் லிங்கன் 156 ஆண்டுகளுக்கு முன், விடுதலைப் பிரகடனம் செய்ததும் இந்த நளில்தான்.

மலர்கின்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலிலும், இந்திய துணைக்கண்ட அரசியலிலும் வியப்பூட்டும் மகிழ்ச்சியான மாற்றங்களை வழங்கப் போகின்றது.

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் குறிப்பாக நதிநீர்ப் பிரச்சினைகளில் கடந்த ஆண்டுகளில் மன்னிக்க முடியாத வஞ்சகத்தையும், துரோகத்தையும் செய்தது. இந்திய மக்களாட்சியின் அடித்தளத்தையே தகர்க்கும் விதத்தில், மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. சர்வாதிகார பாசிச ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்ட, இந்துத்துவ சக்திகள் மதவெறியைத் திணித்து, ரத்தக் களறிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்