பாமக பிரிவுக்கு திமுகவே காரணம்: அன்புமணி தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு

சட்டசபை தேர்தலில் பா.ம.க. வெற்றிக் கூட்டணியை அமைக்கும் என்று அன்புமணி தரப்பு கூறியுள்ளது.;

Update:2025-12-31 09:57 IST

சேலம்,

சேலத்தில் டாக்டர் அன்புமணி தரப்பை சேர்ந்த பா.ம.க. மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலத்தில் பா.ம.க. பொதுக்குழு என்ற பெயரில் நாடகத்தை நடத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் இப்படி அழுது நாடகம் அரங்கேறியுள்ளது. பா.ம.க.வை இரண்டாக உடைக்க ராமதாசுடன் இருக்கும் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் செயல்படுகிறார்கள்.

கட்சியின் விதிகளின்படி பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பா.ம.க. தலைவர் அன்புமணி அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோருக்கு மட்டுமே உள்ளது. தலைவர் அன்புமணி நடத்திய பொதுக்குழு தான் உண்மையானது. அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துவிட்டோம். சட்டசபை தேர்தலில் பா.ம.க. வெற்றிக் கூட்டணியை அமைக்கும்.

அதுவும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக யாருடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படும். டாக்டர் அன்புமணியை பற்றி பேசுவதற்கு ஜி.கே.மணிக்கு எந்த தகுதியும் இல்லை. பா.ம.க. பிரிவுக்கு தி.மு.க.வே காரணம். இதனால் வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்