கூடலூர் பகுதியில் பலத்த மழை-மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
கூடலூர்
கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். நடப்பாண்டில் பருவமழை தாமதம் ஏற்பட்டு வந்தது. இருப்பினும் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. ஆனால் நீர் நிலைகள் தொடர்ந்து வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாயம் பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூர் மற்றும் ஓவேலி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலை உள்பட அனைத்து இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து கடும் குளிர் நிலவியது. மாலை நேரத்தில் பள்ளிக்கூடங்கள் முடிந்து மாணவ- மாணவிகள் வீட்டுக்கு மழையில் நனைந்தவாறு சென்றனர்.
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மேலும் பல மாணவிகள் குடைகளை பிடித்தவாறு சென்றனர். முன்னதாக கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் உள்ள சூண்டி பகுதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சாலையில் குறுக்கே கிடந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனிடையே பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.