மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடக்கம்
60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கவால் குரங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.;
கோப்புப்படம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டு எருமை, சிங்கவால் குரங்குகள், சாம்பல் நிற அணில்கள், வரையாடுகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இப்பகுதி முன்பு சாம்பல் நிற அணில் சரணாலயம் என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என மாற்றப்பட்டது. அடர்ந்த வனப் பகுதியான இப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டி வருவதால் ஏராளமான அரிய வகை வன விலங்குகள் இங்கு உள்ளன.
தற்போது நீர்நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது. இந்த நிலையில் வனப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் இந்த வனப்பகுதியில் வசிக்கக்கூடிய சிங்கவால் குரங்குகள் குறித்து கணக்கெடுக்கும் பணி கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. அதன் பிறகு சிங்கவால் குரங்குகளுக்கு தனியாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
சிங்கவால் குரங்குகள் இனம் அழிந்து வருவதாலும் அதை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மலை அடிவார பகுதியைவிட மலை உச்சி பகுதியில் சிங்கவால் குரங்குகள் காணப்படும். இந்த குரங்குகள் மிகவும் அமைதியான இடத்தில் வாழும் தன்மை கொண்டவை. சிங்கவால் குரங்குகளுக்கு சிங்கம் போன்று பிடரியில் முடியும், உடல் முழுவதும் கருப்பு நிறத்திலும், முகம் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கவால் குரங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதுகுறித்த கணக்கெடுக்கும் பணி விரைவில் நடைபெறும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.