அரசிடம் உதவிகோரி வருபவர்களை அலைக்கழிக்கக்கூடாது

அரசிடம் உதவி கோரி வருபவர்களை வீணாக அலைக் கழிக்க கூடாது என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-07-09 16:33 GMT


அரசிடம் உதவி கோரி வருபவர்களை வீணாக அலைக் கழிக்க கூடாது என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:- அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தங்களது பணியின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்பட வேண்டும்.

மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது கவனம் செலுத்தி அதற்கு உடனடியாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களின் குறைகள் குறித்த மனுக்களின் மீது மிகுந்த அக்கறையுடன் துரிதமாக செயல்பட வேண்டும். அரசின் உதவியை கேட்டு வரும் அவர்களை வீணாக அலைக்கழிக்க கூடாது.

தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்து அதனை தீர்ப்ப தற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். மேலும், அலுவலக கோப்புகள் எக்காரணம் கொண்டும் நீண்ட நாட்கள் தேங்கிவிடாத வகையில் துரிதமாக செயல்பட வேண்டும்.

தடுப்பூசி

அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தங்களது கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை செலுத்திக் கொண்டுள்ளனரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கிராமத்தை 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமமாக மாற்ற பாடுபட வேண்டும். பள்ளி கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்