குழந்தை திருமணம் குறித்து புகார் வந்தால் உடனடி வழக்கு

குழந்தை திருமணம் குறித்து புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் பிரபு சங்கர் அறிவுரை வழங்கினார்.

Update: 2023-09-26 19:32 GMT

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு காலாண்டு கூட்டம், குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள் குறித்து கூராய்வுக் கூட்டம் மற்றும் மிஷன் வட்சல்யா வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களில் பதிவு மற்றும் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் விவரம் குறித்தும், மாவட்ட நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு (89033 31098) வரும் புகார் அழைப்புகள் விவரங்கள் குறித்தும், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகள், மீட்கப்பட்ட குழந்தைகள் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பள்ளி சென்று வரும் குழந்தைகளின் விவரம் குறித்தும், குழந்தை திருமண புகார்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குழந்தை திருமணம்

மேலும் குழந்தைகள் நலக்குழு செயல்பாடுகள், குழந்தைகளுக்கான உதவி மையம் எண் 1098-க்கு வந்த புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில நிதியின் கீழ் நிதி ஆதரவு பெற்று வரும் குழந்தைகளின் விவரங்கள், சிறைச்சாலையில் இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரங்கள் (இளம் சிறார்கள் எவருமில்லை), கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட்ட விவரங்கள் ஆகியவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இதில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதி பெற்று வழங்கிய விவரங்கள், குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை குழந்தைகள் மீட்பு நடவடிக்கை விவரங்களின் அறிக்கை, கொரோனா நிவாரண நிதி பெற்று வழங்கிய விவரங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் வந்தவுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்