ஐ.எப்.எஸ். நிதி நிறுவன நிர்வாகி வீட்டில் மீண்டும் போலீசார் சோதனை

காட்பாடியில் ஐ.எப்.எஸ் நிறுவன நிர்வாகி லட்சுமி நாராயணன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி ஆவணங்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-04-06 17:57 GMT

நிதி நிறுவன மோசடி

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐ.எப்.எஸ். என்ற நிதி நிறுவனம் பொதுமக்களுக்கு முதலீட்டு பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறியது. இதனை நம்பிய வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். இந்த நிறுவனம் ஒரு லட்சம் பேரிடம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நிர்வாகிகளான லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன், குப்புராஜ், சரவணகுமார் ஆகியோர் மீது சென்னைபொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து வேலூர், காட்பாடி, நெமிலி உள்பட 21 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பணம், ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ஐ.எப்.எஸ். நிர்வாகிகள் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ரூ.57 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும், ரூ.12 கோடி மதிப்பிலான நிர்வாகிகளின் சொத்துக்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

ஆவணங்கள், வாகனங்கள் பறிமுதல்

இதற்கிடையில் காட்பாடி வி.ஜி.ராவ்நகரில் உள்ள லட்சுமி நாராயணன் வீட்டில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கபிலன், அருள், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பவத்தன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வீடு ஏற்கெனவே வழக்கின் காரணமாக 'சீல்' வைக்கப்பட்டிருந்தது.

அதனால் கோர்ட்டு உத்தரவுப்படி 'சீலை' அகற்றி போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு 5-க்கும் மேற்பட்ட சூட்கேஸ் மற்றும் பைகளில் வைத்து போலீசார் எடுத்து சென்றனர். மேலும் அங்கு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்