நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிப்பு
சுல்தான்பேட்டையில் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உரிமையாளர்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டையில் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உரிமையாளர்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நூல் விலை உயர்வு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, ஜல்லிபட்டி, அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் 5 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இந்தநிலையில் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் விசைத்தறியாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் துணி உற்பத்திக்கான பாவு நூல் அளவை குறைத்து வழங்கி வருகின்றனர். இதனால் விசைத்தறிகள் இயக்கப்படாமல் உள்ளது.
நூல் விலை உயர்வால் விசைத்தறி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் விசைத்தறிகளை நம்பி இருந்த தொழிலாளர்களுக்கு தினமும் வேலை கிடைக்காத நிலை உள்ளது. குறிப்பாக விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நூல் விலை உயர்வால் ஜவுளி விலை உயரும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சுல்தான்பேட்டை விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது:-
கட்டுப்படுத்த வேண்டும்
கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் தொழில் துறையினரை கவலை அடைய செய்து உள்ளது. நாங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாவு நூல் பெற்று நெசவு செய்து வருகிறோம். இதற்காக கூலி வழங்கப்படுகிறது. நூல் விலை அதிகரிப்பால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் மிகவும் குறைவாக வழங்குகின்றனர். இதனால் விசைத்தறியாளர்கள் மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
தற்போது உயர்ந்து வரும் நூல் விலையால் தொழில் மந்தமாக உள்ளது. விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் இங்கு வேலை இல்லாததால், மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. உரிமையாளர்கள் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உளளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.