கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகம் முன்புவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலம் முன்பு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி உள்ளிட்ட 4 தாலுகாக்களில் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் அந்த அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

நிவாரணம் வழங்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2022-ம் பருவமழை குறைந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கட்டுள்ளது. விளை நிலங்களில் 33சதவீதத்திற்கு கீழ் தான் விளைச்சல் கிடைத்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி தாலுகா மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவியதால், விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தமிழக ்அரசு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் நல்லையா, மாநில குழு உறுப்பினர் லெனின் குமார், தாலுகா தலைவர்கள் சிவராமன், வேலுச்சாமி, தாலுகா செயலாளர்கள் ரவீந்திரன், சந்திரசேகர், வேலாயுதம், அசோக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் விவசாயிகள் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்