ரூ.8 லட்சத்தில் செயற்கை கால் தயாரிக்கும் எந்திரம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.8 லட்சத்தில் செயற்கை கால் தயாரிக்கும் எந்திரத்தை முதல்வர் பாலாஜிநாதன் இயக்கி வைத்தார்.;

Update:2022-11-06 01:30 IST

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.8 லட்சத்தில் செயற்கை கால் தயாரிக்கும் எந்திரத்தை முதல்வர் பாலாஜிநாதன் இயக்கி வைத்தார்.

செயற்கை அவைய தினம்

தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் செயற்கை அவயங்கள் (செயற்கை கை, கால் உற்பத்தி மையம்) துணை நிலையம் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாற்றுத்திறனாளி நோயாளிகளுக்கு பல்வேறு துறை மூலமாக பயனடைய செய்துள்ளனர்.

இந்த நிலையில் உலக அளவில் செயற்கை உறுப்புப்பொருத்தல் மற்றும் மாற்றுத்திறனர் உதவி கருவி தினம் (செயற்கை அவைய தினம்) முதன் முதலில் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

ரூ.8 லட்சத்தில் புதிய எந்திரம்

இதையொட்டி செயற்கை அவைய துணை நிலையத்தில் ரூ.8 லட்சத்தில் செயற்கை கை, கால் உற்பத்தி செய்யும் எந்திரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் பாலாஜிநாதன் இயக்கி வைத்தார். அப்போது நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் குமரவேல், டாக்டர் ராஜமோகன், செயற்கை அவைய தொழில்நுட்பவியலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், "தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை 185 நவீன செயற்கை கை மற்றும் கால்கள் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 85 உறுப்புகள் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உள்ள செயற்கை அவைய துணை நிலையத்தில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.1½ லட்சம்

இந்த உறுப்புகளின் விலை வெளியில் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை ஆகும். ஆனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இலவசமாக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பொருத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்