இந்தியா கூட்டணியில்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து பயணிக்கும்

இந்தியா கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து பயணிக்கும் என நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.;

Update:2023-09-24 00:15 IST

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன் முன்னிலை வகித்தார். இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி பெருந்துறையில் கொ.ம.தே.க மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் உலக சாதனை நிகழ்ச்சியாக, ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளும் கொங்கு வள்ளி, கும்மி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழுமையாக வரவேற்கிறது. மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகனூர் பகுதியில் பொதுமக்கள் விருப்பம் இல்லாமல், மாநில அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முன் வந்துள்ளது. பொதுமக்கள் விரும்பாத போது அங்கு தொழிற்பேட்டையை அரசு அமைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

பா.ஜனதாவை முன்னிலைப்படுத்தாமல் அண்ணாமலை அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறார். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசி வரும் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர். எனவே கூட்டணி தர்மத்தை கடைபிடித்து அண்ணாமலை நடந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியில் தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கூட்டணி பயணிக்கும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, பொருளாளர் பாலு, விவசாய அணி செயலாளர் சந்திரசேகர், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்