அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்
மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.;
மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி
மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கட்டும் பணிக்கான வரைபடங்களை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் லலிதா, கலெக்டர் அலுவலக கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் 4-ந் தேதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தரைத்தளம் மற்றும் அதன்மேலே 7 மாடி என 8 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த பணி 18 மாதங்களில் முடிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே பணியை முடித்து தருவதாக ஒப்பந்தக்காரர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு (2023) ஜூலை மாதம் மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
நினைவு மண்டபம்
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே விருந்தினர் மாளிகை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவிஞர் வேதநாயகம் பிள்ளை நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் பணி உடனே தொடங்கப்படும். மயிலாடுதுறை புறவழிச் சாலையை பொருத்தவரை நிலம் எடுப்பு பணி முடிந்தவுடன் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் (கட்டிடம்) விஸ்வநாத், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஒன்றியக் குழு தலைவி காமாட்சிமூர்த்தி, நகரசபை தலைவர் செல்வராஜ் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.