மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காததால்நிதி நிறுவன அதிபரின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை

Update: 2023-03-17 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காததால் பிரபல நிதி நிறுவன அதிபரின் நிலம் மற்றும் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நிதி நிறுவன அதிபர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளிரோடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 47). இவருடைய மனைவி லதா (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சிவராஜ் நிதிநிறுவன அதிபராக இருந்துவந்தார்.

இவரிடம் கடன் வாங்கும் பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவிப்பதுடன் செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தார்.

இதுதொடர்பான வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிவராஜின் செயல்பாடுகள் பிடிக்காத அவரது மனைவி லதா தர்மபுரி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றார்.

ஜப்தி செய்ய நடவடிக்கை

மனைவி மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு செலவிற்காக ரூ.3 லட்சத்து 61 ஆயிரம் ஜீவனாம்சம் தர குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சிவராஜ் ஜீவனாம்சம் தராததால் அவரது மனைவி குடும்ப நல கோர்ட்டில் மனு அளித்தார். அப்போது சிவராஜின் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் விட்டு ஜீவனாம்சம் வழங்க வருவாய் துறையினருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து பாலக்கோடு தாசில்தார் ராஜா, மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் குமரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாய் கிராமத்திற்கு நேற்று சென்றனர்.

அங்குள்ள சிவராஜிக்கு சொந்தமான 5 ஏக்கர் 40 சென்ட் நிலம் மற்றும் வீட்டை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பு பலகையை அங்கு வைத்தனர். இதனால்அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்