பரங்கிப்பேட்டையில் துணிகரம்வீட்டின் கதவை உடைத்து ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளைபக்கத்து வீட்டுக்காரர் கைது

பரங்கிப்பேட்டையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-21 18:45 GMT

பரங்கிப்பேட்டை, 


ஆட்டோ மொபைல்ஸ் கடை உரிமையாளர்

பரங்கிப்பேட்டை கொல்லங்கடை தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 51). இவர் பரங்கிப்பேட்டை கடைவீதியில் (ஆட்டோ மொபைல்ஸ்) இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் சாகுல்ஹமீது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் அருகே உள்ள புதுப்பேட்டை கடற்கரைக்கு சென்றார். பின்னர் அவர் குடும்பத்துடன் மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சாகுல்ஹமீது உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.38 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் பதறிய அவர் இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தோட்டத்தில் புதைத்த நகை, பணம் மீட்பு

அதன்பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கலிலுல்ரகுமான் மகன் அப்துல் காதர் சாதிக் (46) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அவர் சாகுல்ஹமீது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து, தனது வீட்டின் பின்புற தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய வீட்டின் பின்புற தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகை, பணம் மீட்கப்பட்டது. பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்