அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-24 18:45 GMT

அரசு பள்ளி ஆசிரியர்

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தின் பின்புற பகுதியில் உள்ள அன்னை தெரசா நகரில் வசித்து வருபவர் குமார் (வயது 57). இவர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று மாலை 5 மணியளவில் விழுப்புரம் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

நகை-பணம் திருட்டு

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்