விருச்சிகம்: புத்தாண்டு ராசிபலன் 2026: உச்ச நிலை பெறும் குரு: அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்குமா..?
குலதெய்வத்தின் அருளால் பலருக்கும் நல்ல தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.;
விருச்சிகம்
அதிர்ஷ்டமான அமைப்பு
விருச்சிக ராசியினருக்கு இது ஒரு அதிர்ஷ்டகரமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில் பாக்கியஸ்தானத்திற்கு மாறும் குரு உச்ச நிலை பெற்று ராசி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பார்ப்பது அதிர்ஷ்டமான அமைப்பு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சனி ஏற்படுத்திய குழந்தை பாக்கிய தாமதங்கள் குருவின் பார்வையால் விலகும். குலதெய்வத்தின் அருளால் பலருக்கும் நல்ல தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் நீண்ட கால நன்மை தரும் முதலீடுகள் மற்றும் தொழில்களை தொடங்க திட்டமிட்டு செயல்படுங்கள். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் செல்வாக்கு மற்றும் நற்பெயர் பெறுவார்கள். எதிரிகள் உங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
குடும்பம், நிதிநிலை
திருமண விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பி உற்றார், உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். பலருக்கும் வாழ்க்கைத் துணையின் வழியில் பல்வேறு சொத்துக்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.
நிதி நிலையை பொறுத்தவரை முதல் 5 மாதங்களுக்கு சிரமங்கள் இருந்தாலும் அதன் பிறகு வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய உதவியை நாடி பலரும் வருவார்கள். பழைய கடன்களை அடைத்து விடுங்கள். நிலங்கள் மற்றும் வீடுகளை வாங்கும் பொழுது சட்டப்பூர்வ விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்த பிறகே காரியத்தில் இறங்க வேண்டும்.
தொழில், உத்தியோகம்
மருத்துவம், ஆராய்ச்சி, சுய தொழில் ஆகியவற்றில் நல்ல வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். நிதி சார்ந்த ஆலோசனை வழங்குபவர்களுக்கும் இது அருமையான காலகட்டம். உங்கள் எதிர்கால நலன்களுக்கான திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நேரம் இது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்களை தகுந்த ஆலோசனையுடன் வகுத்துக் கொள்ளும் காலம் இது.
வெளிநாட்டு தொடர்புள்ள பன்னாட்டு நிறுவனங்கள், அரசு உயர் பதவிகள், நிதி சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இது பொன்னான காலம். சாதாரண பதவியில் இருப்பவர்களுக்கு உயர்
பதவிகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாட்டு ப்ராஜெக்ட்களில் பிஸியாக இருப்பார்கள். ஒரு சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்து கடல்கடந்து செல்வார்கள்.
கலை, கல்வி
கலைத்துறையினர், சினிமா, தொலைக்காட்சி மற்றும் இசை ஆகிய துறையில் உள்ள இளம் தலைமுறையினர் புதிய சாதனைகளை செய்வார்கள். சினிமா துறையில் இருப்பவர்கள் தேசிய புகழ் பெறுவார்கள். எழுத்துத் துறையில் இருப்பவர்கள் புதிய நூல்களை வெளியிடுவர். கலைத்துறைகளில் திறமைகள் இருந்தும் நீண்ட காலமாக வெளிவர முடியாத இளம் தலைமுறையினர் இந்த புத்தாண்டில் வெற்றி பெறுவார்கள்.
கல்வியைப் பொறுத்தவரை கணிதம், அறிவியல், இன்ஜினியரிங், நிதி சம்பந்தமான படிப்புகளில் மாணவியர்கள் புதிய சாதனைகளை செய்வார்கள். அரசு மற்றும் தனியார் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று பதவிகளில் அமர்வார்கள். உயர் கல்வி பயில்பவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும்.
நன்மைகள் நாடி வர..
சனியின் சஞ்சாரம் காரணமாக வயிறு தொடர்பான, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். மேலும், மார்பகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றல் பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் இந்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளுங்கள்.
ஆன்மீக வளர்ச்சிக்கு உரிய இந்த ஆண்டில் விருச்சிக ராசியினர் பல தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. தினமும் ஏதேனும் ஒரு யோக பயிற்சியை செய்வதும் அவசியம். வார நாட்களில் முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், திருநீறு அபிஷேகம் செய்வதும் நல்லது. காளி மற்றும் துர்க்கை ஆகிய பெண் தெய்வங்களுக்கு செவ்வாய் கிழமைகளில் 27, 54 எண்ணிக்கையில் எலுமிச்சை மாலை அணிவிப்பது மிகவும் நல்லது. முடிந்தால் அருகில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்களுக்கு காலை நேரத்தில் பருப்பு சாதம் பிரசாதமாக வழங்கலாம்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்