அடுத்தடுத்து 4 பெண்களிடம் நகை பறிப்பு

திட்டக்குடி அருகே அடுத்தடுத்து 4 பெண்களிடம் மர்ம நபர்கள் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-10-17 18:45 GMT

ராமநத்தம்

வீட்டின் சுவர் வழியாக...

திட்டக்குடி அருகே உள்ள எழுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ரத்தினம்பாள்(வயது 57). இவர் சம்பவத்தன்று இரவு தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் வழியாக உள்ளே குதித்த மர்ம நபர்கள் ரத்தினம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தாலியை பறித்து சென்றனர். இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

அதேபோல் அருகில் உள்ள கைலாசம் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவி சுவிதா(32) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தாலி, அதே பகுதியை சேர்ந்த சங்கரின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி சுதா(27) என்பவரின் கழுத்தில் கிடந்த 4 கிராம் தாலியை பறித்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த செல்போனையும் திருடிச் சென்றனர்.

18 கிராம் தாலி

மேலும் அருகிலுள்ள போத்திராமங்கலம் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவி லலிதா(40) என்பவரின் கழுத்தில் கிடந்த 6 கிராம் தாலியை பறித்துக்கொண்டு சுதா வீட்டில் திருடிய செல்போனை இங்கு போட்டுவிட்டு தப்பி சென்றனர். 4 பெண்களிடம் மொத்தம் 18 கிராம் தாலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அறிந்து ஆவினங்குடி போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண்களிடம் தாலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடுத்தடுத்து 4 பெண்களிடம் மர்ம நபர்கள் தாலியை பறித்துசென்ற சம்பவம் எழுமாத்தூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்