களக்காடு தலையணை மூடல்
பராமரிப்பு பணி காரணமாக களக்காடு தலையணை மூடப்பட்டது.;
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணைக்கு சமீபகாலமாக கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் மரம், செடி, கொடிகளும் மழை இன்றி காய்ந்து வருகிறது. இதுதவிர வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக களக்காடு தலையணை நேற்று முதல் மூடப்படுவதாக களக்காடு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலையணை நுழைவுவாயில் மூடப்பட்டது. முன்னரே அறிவிக்காததால் தலையணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.