கொல்லிமலையில் பலத்த மழை: ஏரி நிரம்பி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொல்லிமலையில் பலத்த மழை காரணமாக ஏரி நிரம்பி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மூங்கில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-10-10 18:45 GMT

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் பலத்த மழை காரணமாக ஏரி நிரம்பி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மூங்கில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏரி நிரம்பியது

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காந்திபுரம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் ஏரி இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

மேலும் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள குண்டுமடுவு ஆற்றின் உபரிநீர் வெண்டாங்கி கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துடன் தண்ணீரை கடந்து பிற இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், வெண்டாங்கி கிராமத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் தற்போது மூடப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் தற்போது பெய்த மழையால் தண்ணீர் செல்ல வழியின்றி கிராமத்துக்குள் புகுந்து விட்டது என்றனர். மேலும் கொல்லிமலை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அடிவாரத்தில் உள்ள 1-வது கொண்டை ஊசி வளைவில் மூங்கில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் நேற்று அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கொல்லிமலைக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் வனச்சரகர் பெருமாள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில் மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்