கோனியம்மன் கோவில் உண்டியலைஉடைத்து பணம் திருட்டு
கோவை கோனியம்மன் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடி சென்றார்.;
கோவை கோனியம்மன் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடி சென்றார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உண்டியலை உடைத்து திருட்டு
கோவை பெரியகடை வீதியில் கோனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் தேர்திருவிழா நடைபெற்றது.
கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோனியம்மன் கோவிலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலையில் பூஜை செய்வதற்காக கோவிலை குருக்கள் திறந்தார்.
அப்போது கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கோனியம்மன் கோவில் முன்பு வைத்திருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர், கோவில் நிர்வாக கமிட்டிக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் உக்கடம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் அந்த நபர் கோவில் உண்டியலின் பூட்டை மட்டும் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி உள்ளார். ஆனால் அதில் எவ்வளவு பணம் - நகை இருந்தது என்று தெரியவில்லை.
ஆனாலும் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் கொள்ளை போய் இருக்க லாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் கோவில் வளாகத்தில் இருந்த பிரதான உண்டியலை அந்த மர்ம நபர் உடைக்காமல் விட்டதால் அதில் இருந்த பணம் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் உண்டியலை உடைத்து திருடி விட்டு ஒரு மர்ம நபர் தப்பி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
ஆனால் அந்த நபர் கோவிலுக்குள் வரும் காட்சி ஏதுவும் பதிவாக வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த நபர், நள்ளிரவு நேரத்தில் கோவிலின் பின்புற மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இருக்கலாம் அல்லது பக்தர் போல கோவிலுக்கு வந்து இரவில் மறைந்திருந்து அதிகாலையில் கைவரிசை காட்டி விட்டு தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பரபரப்பு
ஆனாலும் அந்த காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு உள்ள இந்த கோவிலில் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.