ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு

Update:2023-08-30 22:32 IST


காங்கயம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு

இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன், ஆணையாளர் முரளிதரன் வழிகாட்டுதலின்படி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா அய்யம்பாளையத்தில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் 23 வீடுகள் கொண்ட 6 ஏக்கர் புன்செய் நிலம், உத்தமபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், இலக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வர சாமி கோவிலுக்கு சொந்தமான கம்பளியம்பட்டியில் உள்ள 8 ஏக்கர் 19 சென்ட் மற்றும் 5 ஏக்கர் 85 சென்ட் நிலம் ஆகியவை ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையாளர் குமரதுரை அறிவுறுத்தலின்படி, உதவி ஆணையாளர் கருணாநிதி நேற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த நிலங்களில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் நிலத்தை சுவாதீனம் செய்து கோவில் செயல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 20 ஏக்கர் 32 சென்ட் அளவுள்ள இடம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 கோடியாகும்.

ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு

கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு நில அளவை குழுவினரால் நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை என பெயர் பலகை மற்றும் எல்லைக்கற்கள் நடப்பட்டன. இதில் கோவில் செயல் அதிகாரி திலகவதி, திருப்பூர் ஆய்வாளர் வீரப்பன், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்