3 பெண்களிடம் சில்மிஷம் செய்த தொழிலாளி கைது
திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த 58 வயது பெண் மற்றும் 62 வயது மூதாட்டியிடமும் தொழிலாளி தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.;
சேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 32), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு 11 மணிக்கு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 52 வயது பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். அந்த பெண் சத்தம் போட்டவுடன் இளையராஜா அங்கிருந்து வெளியே ஓடி உள்ளார்.
அதே கிராமத்தில் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த 58 வயது பெண் மற்றும் 62 வயது மூதாட்டியிடமும் அவர் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவர்களும் சத்தம் போடவே அங்கிருந்து தப்பிஓட முயன்றார். உடனே பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்கள் அடித்ததில் காயம் ஏற்பட்டதால் வாலிபர் இளையராஜா, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சம்பவம் குறித்து பெண்கள் வீரகனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இளையராஜா மீது கொலை மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிந்து இளையராஜாவை கைது செய்தார்.