திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சி - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 22-ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை அழிக்க முடிவு செய்து விட்டது. அந்த திட்டத்தில் காந்தியின் பெயர் இருக்க கூடாது என முடிவு செய்தது பாஜகவின் அரசியல் தரம் தாழ்ந்து இருக்கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. இந்த திட்டத்திற்கு ஜி ராம் என்று பெயர் சூட்டி உள்ளனர். ஆனால் ஹே ராம் என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கி இருக்கின்றனர். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக உள்ளது.
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருகின்றனர். தற்போது மாநில அரசு 40 சதவீத நிதியை அளிக்க வேண்டும் என உள்நோக்கத்துடன் கூறுகின்றனர். இதை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் 24-ந்தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள உள்ளேன்.
காங்கிரஸ் ஆட்சியில் தனியார் சொத்துகள், தேசியமயமாக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் அரசு சொத்துகளை தனியார் மயமாக்கி வருகின்றனர். சாதியவாதம், மதவாதம் போன்றவற்றை வைத்து இயங்குகின்றனர். தற்போது திருப்பரங்குன்றத்தை பாஜக அயோத்தியாக மாற்ற முயற்சிக்கிறது.
இதை கண்டிக்கும் வகையில் வருகிற 22-ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் நான் கலந்து கொள்வேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர். பாஜகவிற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் உள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பணியை மேற்கொள்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் பூர்ணசந்திரன் இறந்தது கவலை அளிக்கிறது, அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு, அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.