“தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம்..” - கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
மன அழுத்தத்தினாலும், பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருவதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.;
கோப்புப்படம்
கோவை,
கோவையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் இந்தியாவில் தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் உள்ளது.
மன அழுத்தத்தினாலும், பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்திக்கின்றனர். மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும், உலகில் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாசாரம், தத்துவத்தை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாசாரம், மறைக்கப்பட்ட தத்துவங்களை மீட்டெடுத்து புது சக்தியை கொடுத்து வருகிறது.
நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தடைகளை கடந்து வளர்ந்து வருகிறது. ஆரியம், திராவிடம் என பிரிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தோற்றுப்போவார்கள். ஏனென்றால் அவர்களிடம் பொய்தான் உள்ளது” என்று அவர் கூறினார்.