தமிழக அரசை விமர்சிக்க கவர்னருக்கு உரிமையில்லை
தமிழக அரசை விமர்சிக்க கவர்னருக்கு உரிமையில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார்.
பரமக்குடி,
தமிழக அரசை விமர்சிக்க கவர்னருக்கு உரிமையில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார்.
கவர்னருக்கு உரிமையில்லை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஆனந்தகுமார் இல்ல திருமண விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தின் கீழ் செயல்படக்கூடியவர். அவர் கவர்னராக இல்லாமல் தனி மனித ஆர்.என்.ரவியாக இருந்தால் எந்த கொள்கையையும் பின்பற்றலாம். அதில் தவறு இல்லை.
ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் அமைப்பு சட்டத்தை பின்பற்ற மறுக்கிறார். திராவிட கொள்கைகள் இறந்துவிட்டன என தனி மனிதனாக கருத்து கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் கவர்னராக அவருக்கு தமிழக அரசை விமர்சிக்க உரிமையில்லை.
உலகில் பொதுவுடமை தத்துவம், தேசிய தத்துவம், திராவிட தத்துவம், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தத்துவம் என ஏராளமான தத்துவங்கள் உள்ளன. இதில் கவர்னருக்கு பிடிக்காதது எல்லாம் இறந்துவிட்டது என கூறுவதற்கு அவருக்கு உரிமை இல்லை.
அப்பட்டமான பொய்
தென் இந்தியாவை பொறுத்தவரை காமராஜரின் ஆட்சி பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தது. அதன் பிறகு திராவிட ஆட்சிகள், சமூக நீதிக்காக போராடியதால் உயர்ந்த நிலையை தமிழகம் பெற்று இருக்கிறது. ஆனால் ஒரு காலத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு அந்த பெருமை கிடையாது.
தென் இந்தியாவிலோ, தமிழகத்திலோ ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்தது கிடையாது. கவர்னர் வெளிப்படையாக மாநில ஆட்சியை விமர்சிக்கக்கூடாது. தமிழக முதல்-அமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது. அவரின் கொள்கையில்தான் மரியாதை இல்லை என்கிறார்.
எடப்பாடி பழனிசாமி இருந்தது போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும் என கவர்னர் விரும்புகிறார். கவர்னரின் விமர்சனத்தை காங்கிரஸ் கண்டிக்கிறது.
கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் பயங்கரவாதத்தை கொண்டு வருவார்கள் என பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.