கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை தொடக்கம்
நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.;
கோவை, ஜூன்.15-
நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.
சீரடிக்கு தனியார் ரெயில் சேவை
பாரத் கவுரவ் என்ற திட்டத்தின் கீழ் பாரம்பரியமிக்க மற்றும் ஆன்மிக மையங்களுக்கு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை தொடக்க விழா வடகோவை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ், தென்னக ரெயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார், சேலம் கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் எலஹங்கா, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக நாளை (வியாழக்கிழமை) காலை 7.25 மணிக்கு சீரடிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலில் படுக்கை வசதி, 3 அடுக்கு குளிர்சாதன வசதி, 2 அடுக்கு மற்றும் முதல் அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன.
1,100 பேர் சென்றனர்
முதல்நாளான நேற்று இந்த ரெயிலில் மொத்தம் 1,100 பேர் சீரடிக்கு சென்றனர். அங்கிருந்து அந்த ரெயில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7.25 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வடகோவை வந்தடைகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு முற்றிலும் தனியார் சார்பில் ரெயில் இயக்கப்படுவதை வரவேற்றாலும் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகணேசன் கூறும் போது, கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் ரெயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து ஆன்மிக மையங்களுக்கு ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) மதுரையில் இருந்து வாரணாசிக்கு தனியார் ரெயில் இயக்கப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
டிக்கெட் கட்டணம்
கோவையில் இருந்து புனித ஸ்தலமான சீரடிக்கு ரெயில் சேவை இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதை தனியார் கையில் கொடுத்து உள்ளதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல வேண்டும் என்றால் மும்பைக்கு செல்லும் ரெயிலில் சென்று புனேவில் இறங்கி சென்று வந்தனர்.
அந்த வகையில் கோவையில் இருந்து புனேவுக்கு படுக்கை வசதி பெட்டியில் பயணிக்க ரூ.700 மட்டும் தான் கட்டணம் ஆகும். ஆனால் இந்த தனியார் ரெயிலில் படுக்கை வசதிக்கு ரூ.2500 கட்டணம் (சென்று வர) வசூலிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் சென்று வர ரூ.1400 தான் கட்டணம் ஆகும். இதில் கூடுதலாக ரூ.1100 வசூலிக்கப்படுகிறது.
குறைக்க வேண்டும்
இதுதவிர 3 அடுக்கு குளிர்சாதன வசதிக்கு ரூ.5 ஆயிரம், 2 அடுக்கு வசதிக்கு ரூ.7 ஆயிரம், முதல் அடுக்கு படுக்கை வசதிக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரெயில்வே சார்பில் இயக்கப்படும் ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன வசதிக்கு (சென்றுவர) ரூ.3 ஆயிரம், 2 அடுக்குக்கு ரூ.5,200-ம், முதல் அடுக்கு வசதிக்கு ரூ.6 ஆயிரம் தான் கட்டணம் ஆகும்.
இதுபோன்ற தனியார் ரெயிலில் ஏழைகள் செல்ல முடியாது. வசதி படைத்தவர்கள் மட்டுமே செல்ல முடியும். எனவே ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.