பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை இலவசமாக வழங்க நடவடிக்கைவாச்சாத்தியில் நடந்த முகாமில் ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் பேச்சு

பொதுமக்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாச்சாத்தி கிராமத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் பேசினார்.

Update: 2023-10-22 19:45 GMT

தர்மபுரி

பொதுமக்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாச்சாத்தி கிராமத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் பேசினார்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் சேவை மையம் ஆகியவற்றின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான வைத்தியநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் என்ற முறையில் நான் இங்கு வந்துள்ளேன். வசதியற்றவர்களுக்கு நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்குவதே தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். அதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும். சட்டப்பணிகள் ஆணையத்தை அணுகினால் தகுதி உள்ள பொதுமக்களுக்கு அனைத்து சட்ட உதவிகளும் இலவசமாக வழங்கப்படும்.

சமரச தீர்வு

சட்ட உதவி கோருபவர்கள் எழுத, படிக்க தெரியாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை சட்டப்பணிகள் ஆணையமே செய்து வருகிறது. இங்குள்ளவர்களுக்கு சட்ட உதவி ஏதேனும் தேவைப்பட்டால் இங்குள்ள சட்டப்பணிகள் ஆணையத்தையோ அல்லது குழுவையோ தொடர்பு கொண்டால் அது நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்படும். உங்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் இலவசமாக வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலவச சட்ட உதவிகள் வழங்குவது மட்டும் எங்கள் பணி அல்ல. அரசாங்கத்தின் மற்ற உதவிகள் அனைத்தும் உங்களுக்கு தங்கு தடை இன்றி கிடைப்பதற்கான அனைத்து வழிவகைகளை செய்வதும் எங்கள் பணியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தாலுகாவிலும் இலவச சட்ட உதவிகள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்ட உதவி அலுவலகங்களுக்கு சென்று உங்களுடைய பிரச்சினைகளை எடுத்து கூறினால் அதற்கு தீர்வு காண உரிய சட்ட உதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் சட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வை பெற முன் வரவேண்டும்.

இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் பேசினார்.

கோரிக்கை மனுக்கள்

இந்த முகாமில் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த பெண்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனிடம் மனுக்கள் அளித்தனர். முன்னதாக விழிப்புணர்வு முகாமின் தொடக்கத்தில் தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி வரவேற்று பேசினார்.

இந்த முகாமில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது, கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி மாவட்ட சிறப்பு நீதிபதி ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்