தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

எரியோடு அருகே தொழிலாளியை கொலை செய்தவருக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-01-31 16:30 GMT

தொழிலாளி கொலை

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நாகையன்கோட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி (58) என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3.9.2018 அன்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த துரைப்பாண்டி, செல்வத்தை கடுமையாக தாக்கினார். அதில் கீழே விழுந்த செல்வத்தை, துரைப்பாண்டி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வம் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பாக செல்வத்தின் மனைவி புஷ்பா எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் சூசைராபர்ட் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்