கேரள மாநிலத்தை போல்ஓய்வுபெற்ற போலீசார் உயிரிழந்தால் போலீஸ் துறை மரியாதை வழங்க வேண்டும்:தேனியில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்
கேரள மாநிலத்தை போல், ஓய்வுபெற்ற போலீசார் உயிரிழந்தாலும் போலீஸ் துறை மரியாதை வழங்க வேண்டும் என்று தேனியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
ஓய்வுபெற்ற போலீசார்
தேனி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் 2-ம் ஆண்டு தொடக்க விழா தேனியில் நடந்தது. விழாவையொட்டி ெஹல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. பங்களாமேட்டில் இந்த ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தொடங்கி வைத்தார்.
மதுரை சாலை, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் முன்பு ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஓய்வுபெற்ற போலீசார் பலர் கலந்துகொண்டனர். பின்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். தலைமை ஆலோசகர்கள் அறிவானந்தம், சுருளியாண்டி, பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர் தனுஷ்கோடி தீர்மானங்களை வாசித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் ஓய்வுபெற்ற பிறகு போலீசார் உயிரிழந்தால் கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் முழு போலீஸ் துறை மரியாதை செலுத்த அரசு உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற போலீசார் அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச அல்லது கட்டணச் சலுகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற போலீஸ் துறையினர் நலச்சங்க கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் இடம் வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற போலீசாரின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். 70 வயதை கடந்தவுடன் 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.