வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-05 23:29 IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதம்

ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்

உண்ணாவிரத போராட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.. சிவபாலன், தமிழ்செல்வன், முருகேசன், பூப்பாண்டியன் ஆகிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் குழு சங்கங்களின் மாவட்ட செயலாளர் லிங்கதுரை வரவேற்று பேசினார். இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகி சுவாதி வாழ்த்தி பேசினார்.

இந்த போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசி தமிழக முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி ஆணையாக வெளியிட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்