கிணற்றில் தவறி விழுந்து பரிதவித்த ஆட்டுக்குட்டி - தீயணைப்பு துறையினர் மீட்பு
அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றில் இருந்து ஆட்டுக்குட்டியை மீட்க முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை.;
நாமக்கல்,
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலன். இவரது மனைவி தீபா. இவர்கள் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். தீபா அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் இருந்த 40 அடி ஆழ கிணற்றுக்குள் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கிணற்றில் இருந்து ஆட்டுக்குட்டியை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் ஆட்டுக்குட்டியை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிய ஆட்டுக்குட்டியை கயிற்றின் மூலம் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.